Thursday, 2 July 2009

கனவு

விடியற்காலை. சூரியன் கண் விழிக்கும் நேரம். அன்று அவிழ்ந்த மலர் போல இன்றும் விழித்தெழுந்தாள் கோதை. வாசல் தெளித்து, கோலமிட்டால். நேற்று கடைத்தெருவின் அருகே உள்ள ஒரு வீட்டில் அவள் கண்ட கோலம், இன்று இவள் வீட்டின் வாயிலில் அவதரித்துவிட்டது. கோதைக்கு கோலங்கள் என்றால் கொள்ள இஷ்டம். கம்பி கோலம், நேர் புள்ளி, சந்து புள்ளி என பலவற்றிலும் கைதேர்ந்தவள். தனது படைப்பினைக் கண்டு, அதன் மீது ஒரு புன்முறுவல் தூவிவிட்டு வீட்டினுள் சென்றாள்.

வெண்ணிலவு தரை இறங்கி, மண்ணில் ஓடும் நதிகளில் குளிக்க முயற்சிக்கவில்லை. குளித்திருந்தால் இவளை போன்றுதான் இருக்கும். இவளின் ஈரமான கூந்தலும், அதில் சிரிக்கின்ற பூக்களும், நல்ல சிவப்பு குங்குமம், மஞ்சள் சீலையும், சத்தமிடும் வளையல்களும், குழையும் கொலுசும், ஒரு ரோஜா தோட்டாமே ஆடை உடுத்தி வந்ததுபோல் அவ்வளவு அழகு.

"இறைவா! உனக்கு நித்தம் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். அன்பான கணவர், அழகான குழந்தைகள். இதைவிட பெரிதாய் உன்னால் எதை கொடுத்திருக்க முடியும்? நன்றி!", என்று தனது பூஜையை முடித்துவிட்டு, முன் அறையுள் வந்தாள்.

அமைதியாய்த் தூங்கும் தன் கணவனை தூரம் நின்று ரசித்தாள். பிறகு மிதுவாய் அடிவைத்து அவனருகே சென்று, ஆசை முத்தங்களைப் பொழிந்தாள். அயர்ந்து கண்களைத் திறந்தவன், "உன்னைப் பார்த்த பிறகுமா அந்த சூரியன் வெளியே உலவுகிறது?", என்று கூற, வெட்கப்பட்டு விலகி ஓடிச் சென்றாள்.

அவளுக்குக் கடவுள் கொடுத்த அன்பளிப்பு - ஒரு மகள், லக்ஷ்மி; ஒரு மகன், குமரன். தனது மகளைப் பெற்ற நொடியில், அவளுக்குத் தன் மறைந்த தாயே மீண்டும் வந்து பிறந்திருக்கிறாள் என்று அசரீரி ஏதும் ஓதியாதோ என்னவோ, என்றுமே லக்ஷ்மியை 'லக்ஷ்மிமா' என்று தான் அழைப்பாள்.

ஏழு மாதக் குழந்தை, குமரன் சிணுங்க, அவனை மார்போடு அனைத்து, தன் ரத்தத்தில் பிரித்ெடுத்த பாலினை ஊட்டினாள். பின், அவனை தரையில் கிடத்தி, அவனுக்கும் கடவுளுக்கும் மட்டும் புரியும் பாஷையில் அவன் பேசி விளையாடும் பொம்மைகளை அவனிடம் தந்துவிட்டு, அடுப்பறைக்குள் சென்றாள்.

பெருமாள் பாற்கடலிலிருந்து எடுத்துவந்த அமுதத்தில், சில துளிகளை இவள் கைகளில் அப்பிக்கொண்டாளோ என்னவோ தெரியாது. ஆனால், இவள் படைக்கும் உணவு, 'அமுதமென்றால் இதுதானோ?' என்று வினவ செய்யும். அன்று வெளிக்கிழமையானதால், தன் கணவனுக்குப் பிடித்த 'பால் பாயசமும்' செய்திருந்தாள்.

"அம்மா, அம்மா... ", என்று அழைத்துக்கொண்டு அடுப்பறையுள் வந்த லக்ஷ்மியை அனைத்து, "லக்ஷ்மிமா எழுந்தாச்சா?", என்று கூறி முத்தமிட்டாள். தான் சிறு வயதில் பயின்ற திருப்புகழைப் பாடிக்கொண்டு, லக்ஷ்மியை குளிப்பட்ட, இந்த மூன்று வயதுச் சிறுமுயும், தானும் அவற்றைப் பாடுவது போல் முனகிக் கொண்டிருந்தால். நீருக்குள் மூழ்கி எழுந்த தாமரைபோல் நின்றிருந்த லக்ஷ்மியை, உடை அணிவித்து, அலங்காரம் செய்தாள்.

மேஜையில் லக்ஷ்மிக்கு உணவு ஊட்டிக்கொண்டே, கணவனுக்குப் பரிமாறினாள். பால் பாயாசத்தைக்கண்டு மகிழ்ச்சியானவனுக்கு என்ன கிளர்ச்சியோ, படக்கென கோதையின் கண்னங்களில் முத்தமிட்டான். இதைக்கண்டு கைகள் தட்டி லக்ஷ்மி சிரிக்க, வெட்கம் தொண்டையை அடைக்க, சிவப்பு, கண்னங்களில் பரவ, நானி நின்றாள் கோதை.

கணவன் அலுவலகத்திற்க்கும், லக்ஷ்மி பள்ளிக்கும் சென்றபின், குழந்தையோடு சிறிது நேரம் கொஞ்சி விளையாடி, பாலூட்டி, உறங்கவைத்து, பின் அடுப்பறை சுத்தம் செய்து, துணி தோய்த்து, அயர்ந்து வந்து அமர்ந்தாள். மதியம் உணவு அருந்தி, சிறிது நேரம் கண் உறங்கி எழுந்தாள்.

மாலை நேரம். லக்ஷ்மி பள்ளீிலீருந்து வந்து, உடை மாற்றி பட்டாம்பூச்சியை பறந்துவிட்டாள் நண்பரோடு விளையாட. குமரனை இடுப்பில் வைத்து, தன் மகள் விளையாடுவதை வாசலில் நின்று ரசித்திருந்தாள். 'சென்று வருகிறேன்', என்று கூறி சூரியன் மறைந்த பின், தன் மகளை அழைத்துச் சென்று, அவள் பள்ளியில் நடந்தவைகளை, லக்ஷ்மியை கூறச் சொல்லி கேட்டு ரசித்தாள், மழலை மொழியை!

அந்தி சாய்ந்த பின் வீடு வந்த கணவனை அழைத்து, அவன் கூறிய சங்கதிகளைக் காதிலும், மனதிலும் வாங்கிக்கொண்டாள். பிறகு அனைவருக்கும் உணவு படைத்துவிட்டு, தாலாட்டு கூறி குழந்தைகளை உறங்க வைத்தாள். தனக்கும் தலையணை தாலாட்டு வேண்டுமென கணவன் சிணுங்க, அவனோடு சல்லாப்ிதது, அவன் மார்பிலேயே உறங்கிபோனால் மீண்டும் கடவுளுக்கு 'நன்றி!' கூறிவிட்டு.

"கோதை.. யே எழுந்திரு", என்று கூறி தலயில் தட்ட, பதறி எழுந்தால் கோதை. "என்ன பகளிலேயே உறக்கம்? இப்படி தூங்கினா உடம்பு பெருத்து, எங்கிருந்து போழைக்கிறது? போ! போ! முகத்த கழுவி, அலங்காரம் செய். மறக்காம ஜவ்வாது போடு. மேல் மாடி ரூம்‌ல கஸ்டமர் வெய்ட் பண்றாங்க. ம்ம்... சீக்கிரம்", என்று உறுமி விட்டுச் சென்றாள் ராணி அக்கா.

கவிதையாய் இனித்தவை எல்லாம் வெறும் கனவுதான் என்று அப்போது உணர்ந்தாள். சேலையை சரி செய்து, மல்லிகை சூடி, உதட்டுச் சாயம் பூசி, ஜவ்வாது தூவி, அந்த அறைக்குச் சென்றாள், தற்காலிக கணவனை மகிழ்விக்க!

'காலம்' சிலர் கைகளுக்குள் பூவை தினிக்கும். சிலர் காலடியில் பூகம்பத்தைப் பரப்பும். பூகம்பத்துள் புதைந்துகொண்டிருந்தாலும், என்றாவது நாம் கைகளிலும் பூக்களைக் 'காலம்' பரிசலிக்கும் என்ற நம்பிக்கையோடு சென்றாள் கோதை!

1 comment:

  1. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், "விளையாடப் போன குழந்தை வீடு திரும்பவில்லை", "அவளுக்கு ஏற்கெனெவே ஒரு காதலன் இருந்தான்" என்பது போன்ற திருப்பு முனைகளை எதிர்பார்த்து, படித்து முடிக்கும் போது,"இது போன்று தான் இருக்கும் என முதலிலேயே நினைத்தேன்" என்று கூறலாம் என் நினைத்தேன். சற்றும் எதிர்பாரா வண்ணம் முடிக்கப் பெற்று இருக்கிறது. நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete